தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - காவல் துறையினர் தீவிர விசாரணை! - ராணுவ ஹெலிகாப்டர் விபத்து காவல்துறையினர் தீவிர விசாரணை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

By

Published : Dec 12, 2021, 7:48 PM IST

நீலகிரி:கடந்த புதன் கிழமையன்று (டிசம்பர் 8) தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அலுவலர்கள் என 13 பேர் உயிரிழந்தனர்.

உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மறைந்த பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள் டெல்லியில் தகனம் செய்யப்பட்டன. மற்ற வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டன.

மத்திய, மாநில அரசின் அலுவலர்கள் விசாரணை

இந்த நிலையில், விபத்து குறித்து அப்பர் குன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள், அப்பகுதி பொதுமக்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - காவல்துறையினர் தீவிர விசாரணை

ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாவதற்கு சில நொடிகள் முன்னர், ஹெலிகாப்டரை சுற்றுலாப் பயணி ஒருவர் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அலுவலர் ஏர் மார்ஷல் மானவேந்தர் சிங் தலைமையில் நான்காவது நாளாக விசாரணை நடைபெறுகிறது. விபத்து நடந்த இடத்தை ராணுவக்கட்டுபாட்டில் கொண்டு வந்து, அங்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் புதிய தகவல்கள்

இதையடுத்து விபத்து தொடர்பாக குன்னூர் காவல் துறையினரின் புதிய விசாரணைத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது,

1. ஹெலிகாப்டர் விபத்தை கடைசியாகப் படம் பிடித்த நபரின் கைப்பேசியை காவல் துறையினர் பறிமுதல் செய்து கோவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

2. சம்பவ இடத்தில் உயர் மின் அழுத்த மின்கம்பிகள் உள்ளதா, அது சேதமடைந்துள்ளதா என்பது பற்றி காவல் துறை சார்பில் நீலகிரி மாவட்டம் மின்சாரத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

3. சம்பவ இடத்தின் அருகில் உள்ள வனப்பகுதிகளில் STF (Special Task Force) தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4. விபத்து நடந்த நாளன்று சம்பவ இடத்தின் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பலதரப்பட்ட சாட்சிகளை காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயரிடப்பட்டதால் சர்ச்சை!

ABOUT THE AUTHOR

...view details