"திமுக என்றாலே ஊழல், அதிலும் ஆ.ராசா ஒரு மிகப்பெரிய ஊழல்வாதி" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்! நீலகிரி:உதகையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்திலுள்ள மக்கள் நேரடியாக தங்கள் குறைகளை தெரிவிக்கவும், மத்திய அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளவும் அலுவலகம் முகாமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கணபதி ஹோமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக, கடந்த 9 ஆண்டில் இந்தியாவை ஒரு மிகப்பெரிய வளர்ச்சி தேசமாக மாற்றியுள்ளார். இந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் அரசி ஏழை எளிய மக்களின் நலன், நல்ல அரசு மற்றும் சேவை ஆகியவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுகிறது.
இதற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்துகிற சம்பவமாக, நமது எம்பியை நமக்கு சேவை செய்ய வாக்களித்து அனுப்பினோம். ஆனால் அவர் உலகிலேயே இல்லாத அளவிற்கு 2ஜி என்ற ஒரு மிகப்பெரிய ஊழலை செய்தார். அதில் வந்த பணத்தை, தனது பினாமிகள் மூலமாக முதலீடு செய்து வைத்துள்ளார். அதனைக் கண்டறிந்து தற்போது முடக்கியுள்ளனர். அது மக்களுக்கான பணம்.
திமுக அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்வது ஒன்றும் அதிசயமில்லை. திமுக என்றாலே ஊழல்தான்” என்றார். மேலும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்வது குறித்து கேட்டதற்கு, ‘ஆ,ராசா ஒரு மிகப்பெரிய ஊழல்வாதி’ என்றார்.
”தற்போது 1.76 லட்சம் கோடி ரூபாய் 2ஜி ஊழலைத் தொடர்ந்துதான், கோவையில் 55 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மக்கள் இது போன்ற அரசியல்வாதிகளை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஊழல்வாதிகளிடமிருந்து தூரமாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது” என அவர் மேலும் கூறினார்.
அதிமுக கூட்டணி குறித்து கேட்டபோது, தலைமை முடிவு எடுக்கும் என்றார். தற்போது நாடு முழுவதும் 165 தொகுதிகளில் ஏற்கனவே நடந்த தேர்தல்களில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதி அல்லது ஏற்கனவே பாஜக வெற்றி பெற்ற தொகுதி இவை கண்டறியப்பட்டு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது எனவும், இதில் தமிழகத்தில் 9 தொகுதிகள் அடங்கும் எனவும் அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்.. சர்ச்சையில் சிக்கிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு!