நீலகிரி:இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க வேண்டும் எனப் பறவை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனித்துவம் வாய்ந்த சிட்டுக்குருவி
பறவை இனத்தில் சிட்டுக்குருவிக்கென்று ஒரு தனியிடம் உண்டு. மற்ற பறவை இனங்களைப் போல வனப்பகுதியில் வாழாமல், மனிதர்களுடன் ஒன்றி வாழும் இந்த சிட்டுக்குருவிகள் பார்க்க சிறியதாக இருந்தாலும் துரு துருவென சிறகடித்துச்சுற்றி திரிவதுடன் குடியிருப்புப்பகுதிகளில் கூடுகளைக் கட்டி வாழும் தன்மை கொண்டுள்ளன. 10 முதல் 12 ஆண்டுகள் வாழும் இந்தக் குருவிகள், விவசாயிகளின் நண்பனாகவும் இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட சிட்டுக்குருவிகளை கடந்த சில ஆண்டுகளாக பார்ப்பதே அரிதாகி வருகிறது. அதற்கு நகர மயமாக்குதல் முக்கியக் காரணமாக இருக்கிறது. பழங்கால ஓட்டு வீடுகள் மற்றும் குடிசை வீடுகள் அமைப்பது குறைந்தும் கான்கிரீட் வீடுகள் அதிகரித்து வருவதுமே, இதற்கு முக்கியக் காரணம். கான்கிரீட் வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்ட முடியாததால் இனப் பெருக்கம் பாதிக்கபட்டு அழிந்து வருகின்றன. அத்துடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செல்போன் டவர்களும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
’உலக சிட்டுக் குருவிகள் தினம்’ : நீலகிரியில் மட்டும் அழியாமல் நீடிக்கும் சிட்டு குருவி இனம் இயற்கை பாதுகாப்பின் முக்கியப் பங்கு
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றி வரும் இந்த சிட்டுக் குருவி இனம், தமிழ்நாட்டில் வேகமாக அழிந்து வரும் நிலையில் மலை மாவட்டமான நீலகிரியில் மட்டும் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் நீலகிரி மாவட்டத்தில் இன்னும் பழமை மாறாமல் இருக்கும் ஓட்டு வீடுகளும் அவற்றில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டத் தேவையான இட வசதியும் இருப்பதும் தான். அதனுடன், சிட்டுக் குருவிகள் வாழத் தேவையான தானிய வகைகள் இம்மாவட்டத்தில் இருப்பதும் முக்கியக் காரணமாகும்.
அதேபோல், ஏராளமானோர் தங்களது வீடுகளில் மண் பானை, மூங்கில், பிளாஸ்டிக், அட்டைப்பெட்டிகள் போன்றவற்றை கொண்டு சிட்டுக்குருவிகள் வாழ கூண்டுகளை அமைத்து உள்ளனர்.
அவற்றில் வாழும் சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது பறவை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பிற பகுதியில் உள்ள மக்களும் தங்களது வீடுகளில் சிட்டுக்குருவிகள் வாழ கூண்டுகளை அமைக்க வேண்டும் எனப் பறவை ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அதற்கான முன்னெடுப்பை பொதுமக்கள் உலக சிட்டுக் குருவிகள் தினமான இன்று(மார்ச் 20) முதலே எடுக்க வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'நீதிமன்றம் தகவல்களைப் பரிமாறும் தபால் நிலையமாக செயல்பட முடியாது' - சென்னை உயர்நீதிமன்றம்