தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் முன்னோர்களைக் கொண்டாடும் 'சக்கலாத்தி' பண்டிகை! - சக்கலாத்தி

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசித்து வரும் படுகர் இன மக்கள் 'சக்கலாத்தி' பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

badaga festival
சக்கலாத்தி" பண்டிகை

By

Published : Dec 8, 2019, 5:08 PM IST

நீலகிரி மாவட்டத்திலுள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாய மக்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் பவுர்ணமி நாளுக்கு முன்னதாக வரக்கூடிய சனிக்கிழமையில் 'சக்கலாத்தி' எனும் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி, நேற்று மாலை 5 மணியளவில் படுகர் இன மக்கள் தங்களது முன்னோர்களை வரவேற்கும் விதமாக வனப்பகுதியில் வளரக்கூடிய 5 வகை தாவரங்களின் பூக்களை ஒரே கொத்தாகக் கட்டி , தங்களது வீட்டின் கூரைகளில் தலா ஒரு அடி இடைவெளி விட்டு, சொருகி வைத்தனர். இதைத் தொடர்ந்து, தங்களது வீட்டின் அடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலை கொண்டு, வீட்டின் வாசல்களில் அவர்கள் வணங்கும் இயற்கை தெய்வங்களான சூரியன், சந்திரன், கால்நடைகள், விவசாயக் கருவிகள் ஆகியவற்றை உருவங்களாக வரைந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

"சக்கலாத்தி" பண்டிகைக் கொண்டாட்டம்

பின்னர் மாலை 6 மணியளவில் தங்களது முன்னோர்களுக்கு படைப்பதற்காக தயார் செய்த உணவுகளை அனைத்து வீடுகளிலிருந்தும் சேகரித்து, அதனை குடியிருப்புப் பகுதியிலிருந்து சற்று தொலைவில் உள்ள இடத்தில், வாழை இலையில் வைத்து படைத்து, முன்னோர்களை வணங்கி வழிபட்டனர்.

இதே போல படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வரும் அனைத்துக் கிராமங்களிலும் 'சக்கலாத்தி' பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க: தேசிய மாணவர் தினமாக உருவெடுக்கும் ‘அப்துல்காலம்’ பிறந்தநாள்!

ABOUT THE AUTHOR

...view details