நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசன் என்பதால் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கண்டு ரசிக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் பிரசித்திபெற்ற மலர்க் கண்காட்சி நடத்தப்படும்.
சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக இது அமையும். இந்த மலர்க் கண்காட்சி கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், கடந்த 5 மாதங்களாக மலர்க் கண்காட்சி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக 25 ஆயிரம் மலர்ச்செடிகள் தொட்டிகளில் அமைக்கப்பட்டன.