தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எடப்பாடிக்கு இப்போது மட்டும் தைரியம் வந்துவிடுமா என்ன?'

நீலகிரி: கஜா புயலின்போது வேண்டிய நிவாரண நிதியை அழுத்தம் கொடுத்த வாங்கமுடியாத எடப்பாடி பழனிசாமிக்கு இப்பொழுது மட்டும் தைரியம் வந்துவிடுமா என்ன? என்று நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

raja

By

Published : Aug 17, 2019, 7:36 AM IST

Updated : Aug 17, 2019, 7:46 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5ஆம் தேதி தொடங்கிய மழை ஆறு நாள்கள் இடைவிடாது பெய்தது. இந்த மழையால் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கடந்த சில நாள்களாக நீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தற்போது நீலகிரி மக்களவை உறுப்பினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த வெள்ளத்தினால் 500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலில் வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகே தமிழ்நாடு அரசு விழித்துக்கொண்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெள்ளத்தினால் 199 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அவரச கதியில் அறிவித்துள்ளார்.

ஆனால் முழுமையான வெள்ளசேதம் இனிமேல்தான் தெரியும். 2009ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக வீடுகளை திமுக அரசு கட்டிக்கொடுத்தது" என்றார்.

ஆனால் இப்போது அரசு இயந்திரம் சிறிதளவு கூட பணியை மேற்கொள்ளவில்லை என்று சாடிய ஆ. ராசா, மத்திய அரசுக்கு பயந்து வெள்ள நிவாரண நிதியை இவர்கள் கேட்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். கஜா புயலின்போது வேண்டிய நிவாரண நிதியை அழுத்தம் கொடுத்த வாங்க முடியாத எடப்பாடி பழனிசாமிக்கு இப்பொழுது மட்டும் தைரியம் வந்துவிடுமா என்ன? என்றும் ஆ. ராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆ. ராசா பேட்டி

தற்போது எடப்பாடி அரசு முதல்கட்டமாக 30 கோடி ரூபாயை வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்ட ஆ. ராசா, 'இது யானை பசிக்கு சோளப்பொறி' போல் உள்ளது' என்ற பழமொழியை மேற்கோள் காட்டினார்.

மேலும் வெள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற இந்த அரசு முயற்சித்துவருவதாக குற்றம்சாட்டிய அவர், நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தான் மனு கொடுத்ததையும் குறிப்பிட்டுப் பேசினார்.

Last Updated : Aug 17, 2019, 7:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details