நீலகிரி:உதகை காந்தல் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ் பாட்ஷா (வயது 55). இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு வீட்டு வரியை பெயர் மாற்றம் செய்ய உதகை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் நீண்ட நாட்களாக அவருக்கு பெயர் மாற்றம் செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மீண்டும் நகராட்சி அலுவலகம் சென்றபோது, அங்கு வருவாய் உதவியாளராக பணியாற்றிய பாக்யராஜ் என்பவர் மூவாயிரம் ரூபாய் 0லஞ்சம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தனி வீட்டு வரி ரசீது தருவதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மும்தாஜ் பாட்ஷா இதுகுறித்து உதகை லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து 9.2.2009 அன்று லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் பெரோஸ்கான், ஆய்வாளர் ஜெரால்ட் அலெக்சாண்டர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் 3 ஆயிரம் பணத்தை நகராட்சி அலுவலகத்தில் மும்தாஜ் பாட்ஷா, பாக்யராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாக்யராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, ரசாயனம் தடவிய பணத்தை பறிமுதல் செய்தனர்.