ரத சப்தமி விழா: சூரியனார்கோயிலில் 3-ம் நாளான இன்று நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள சூரியனார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான சிவசூரியபெருமான் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நவக்கிரகங்களில் சூரியபகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது.
இங்கு சூரிய பகவானை பிரதானமாகவும், மையமாகவும் கொண்டு வான்வெளியில் எப்படி நவக்கிரங்கள் அமைந்துள்ளதோ அதே பாணியில் இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியனை சுற்றி இருப்பதைப் போல தனித்தனி சந்நிதிகளில், தங்களுக்குரிய வாகனமோ அல்லது ஆயுதமோ கொண்டு அருள்பாலிக்கின்றது.
இந்த திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தை மாதம் நடைபெறும் ரத சப்தமி பெருவிழா. இவ்விழா கடந்த 20-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுகிறது. 3-ம் நாளான இன்று மூலவர், சூரியபெருமான், சமேத உஷாதேவி மற்றும் சாயாதேவி உள்ளிட்ட நவக்கிரகங்கள் அனைத்திற்கும் மற்றும் விநாயகர் பெருமானுக்கும் காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனையடுத்து, விசேஷ சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. பஞ்ச மூர்த்திகளுடன், சூரியபகவான், சாயாதேவி, உஷாதேவி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியவற்றை மலர் அலங்காரத்தில் திருவீதியுலா அழைத்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ரத சப்தமி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 28-ம் தேதி சனிக்கிழமை ரத சப்தமி தினத்தில் காலை தேரோட்டமும், பிறகு 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: Video: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆளுநர் ரவி சாமி தரிசனம்