தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட கிராமம் செருவாவிடுதி. இந்தக் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணி புரிபவர் வட்டார வளர்ச்சி மருத்துவ அலுவலர் மருத்துவர் சௌந்தரராஜன்.
இந்த மருத்துவமனையைத் தனியார் மருத்துவமனைக்கு மேலாக கொண்டுவர எண்ணி, மருத்துவமனை வளாகத்திற்குள் இயற்கை காய்கறித்தோட்டம், பயிறு வகைகள், வாழை, பலா, மாமரங்கள், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றையும் மூலிகைத் தோட்டத்தில் துளசி, ஆடாதொடா, தூதுவளை உள்ளிட்ட பல மூலிகைத் தாவரங்களையும் பயிரிட்டு வருகின்றார்.
உலகத்தரச் சான்று பெற்ற அரசு மருத்துவமனை இங்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த மருத்துவமனை வளாகத்திலேயே மாடு வளர்த்து, அதன்மூலம் கிடைக்கும் தூய்மையான பசும்பாலை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வருகிறார்.
சிசு இறப்புகளைத் தடுக்க தாய்மார்களுக்கு முட்டை வழங்குவதற்காக, இந்த மருத்துவமனை வளாகத்தில் நாட்டுக் கோழி வளர்த்து, அதன் மூலம் கிடைக்கும் முட்டைகளை மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்குகிறார்கள். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள், இந்த மருத்துவமனைக்கு வரும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சௌந்தரராஜன் தினந்தோறும் காலை மாலை என இரண்டு நேரங்களும் மருத்துவமனை சுத்தம் செய்யப்படுகிறது. இதனால், மருத்துவமனை வளாகம் மட்டுமல்லாமல் அனைத்துப் பகுதிகளும் தூய்மையாக இருந்து வருகிறது. மேலும் இங்கு மருத்துவர்கள் மட்டுமல்லாது, இங்கு பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை பணியாளர்களும் அரசின் விதிப்படி உள்ள பணி நேரம் மட்டுமல்லாமல் தாமாக முன்வந்து அதிக நேரம் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சௌந்தரராஜனுக்கு, தமிழ்நாடு அரசின் சிறந்த மருத்துவருக்கான விருது, கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. மேலும், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் மூலமாக விருதும் , அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக விருதும் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இவ்வாறு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருவதால், இந்த மருத்துவமனைக்கு உலகத் தரச் சான்று கிடைத்துள்ளது. மேலும் தேசிய விருதுக்கும் தேர்வாகியுள்ளது.
மருத்துவமனை குறித்து பேசிய உள்ளூர் வாசி இங்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த மருத்துவமனையை சிறப்பாக கொண்டு வருவதற்கு, இந்த கிராம மக்களும் ஆர்வமும் ஒத்துழைப்பும் கொடுத்து வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு ஜெனரேட்டர், குழந்தைகள் விளையாடுவதற்குப் பூங்கா உள்ளிட்ட ஏராளமானவற்றை தங்களது சொந்த செலவில் செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க:காவலரின் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுகள்!