கரோனா ஊரடங்கால் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்யாணம், காதுகுத்து மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்களை உற்சாகப்படுத்தும் பேண்டு வாத்தியங்களும் தடைபட்டுள்ளன. பேண்டு வாத்தியத்தால் மக்களை உற்சாகப்படுத்தும் கலைஞர்கள் தற்போது வேலையில்லாமல் முடங்கி கிடக்கின்றனர்.
போதிய வருமானம் இல்லாததால் சிலர் கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தஞ்சாவூரில் பேண்டு வாத்திய குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டிலேயே குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை, பாத்திமா நகரில் வசித்து வருபவர் ஜெனிட்டா. இவர் பேண்டு இசைக்குழு நடத்திவருகிறார். கரோனா காரணமாக எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவருடன் வேலை பார்த்த இசைக் குழுவினரின் 20 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பேண்டு வாத்திய குழுக்களை போன்று ஏழை எளிய மக்களும் பசியால் வாடி வதைகின்றனர்.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் துயரத்தை போக்க எண்ணிய ஜெனிட்டா வீட்டிலேயே சிறிய முறையில் உணவகத்தை தொடங்கினார். ஒரு இட்லி இரண்டு ரூபாய்க்கும் ஒரு தோசை 5 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார். இந்த சிறிய தொகை பல்வேறு ஏழைகளின் பசியை போக்குகிறது. ஜெனிட்டாவிடம் உணவு வாங்க வரும் மக்கள் பசியாற உண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதேபோன்று பேண்டு வாத்திய இசைக் கலைஞர்களின் பசி போராட்டம் ஓரளவுக்கு தீர்ந்துள்ளது. உதவும் கைகள் சிறியதாக இருந்தாலும், கொடுக்கும் எண்ணம் வேண்டும் என்பதற்கு ஜெனிட்டாவே சாட்சியாக உள்ளார்.
இதுகுறித்து ஜெனிட்டா கூறுகையில், "யாரிடமும் கையேந்தக் கூடாது என்ற தன்னம்பிக்கையோடு இருந்து வந்தோம். நாங்கள் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது. இலவசமாக கொடுத்தால் பொதுமக்கள் வாங்க மாட்டார்கள் என்பதற்காக, குறைந்த விலைக்கு உணவு வழங்கி வருகிறோம். இந்தச் சேவை எங்கள் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு பேண்டு வாத்திய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என கோரினார்.
இதையும் படிங்க:அரசோடு ஒத்துழைக்காத தனியார் மருத்துவமனையை அரசு கையகப்படுத்தும் - நாராயணசாமி!