கும்பகோணம்:பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட, விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா (32). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது ஒன்பது வயது மகன் பிரகதீஷ் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கபிஸ்தலம் பகுதியில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடை நடத்தி வருகிறார்.
வழக்கம்போல கடைக்குச் சென்ற அவர் தனது அன்றாட பணிகளை கவனித்து வந்த நிலையில், பிற்பகல் தனது செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, செல்போன் வெடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கடை தீப்பற்றி எரிய தொடங்கியது.
உடனடியாக கோகிலா அலறி கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கபிஸ்தலம் காவல் துறையினர், கோகிலாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்போன் உபயோகிப்போர் கவனத்திற்கு:செல்போன் சார்ஜ் செய்யும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் இது போன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும் வண்ணம், செல்போன்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக செல்போன்களை சார்ஜ் போட்டபடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் விசாரணைக்கு வரும் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. நீதிமன்ற உத்தரவு என்ன?