தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலணியைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ்(42). தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டிலிருந்துள்ளார். அவரது மனைவி நித்யா (39) தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை விற்கும் முயற்சி தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (டிச.15) காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுந்தர் கணேஷ் வீட்டிலிருந்த நித்யாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில், நித்யா பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, காரில் தப்பிச் சென்ற சுந்தர் கணேஷ், பரிசுத்தம் நகரில் உள்ள பால் விற்பனை மையத்திற்குள் திடீரென புகுந்து அங்கு வியாபாரம் செய்து வந்த கிழ திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன்(35), கோபி(32) ஆகியோரையும் அரிவாளால் வெட்டினார். இதில், தாமரைச்செல்வன், கோபி ஆகிய இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்தனர். அடுத்தடுத்து, நடந்த இந்த அரிவாள் வெட்டு தாக்குதலில் காயமடைந்த நித்யா தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், தாமரைச்செல்வன், கோபி ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.