தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்தனர்.
கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - விளாங்குடி கொள்ளிடம் ஆறு
தஞ்சாவூர்: திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளாங்குடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவையாறு அடுத்த விளாங்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தஞ்சையில் அமைய இருக்கும் ஸ்மார்ட் சிட்டிக்கு குடிநீர் எடுப்பதற்காக இன்று (செப்டம்பர் 15) காலை போர்வெல் அமைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும், போர்வெல் அமைக்கும் இயந்திரத்தையும், பொருள்களையும் கொள்ளிட கரைக்கு எடுத்து வந்தனர்.
இதுபற்றி தகவலறிந்த திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல், சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் சம்ப இடத்திற்கு விரைந்து வந்தனர். திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் மேலாளர் எழிலன், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பிறகு போர் அமைக்கப்படும் என்று கூறியதன் பேரில் கலைந்துச் சென்றனர்.