தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்களை விட ஒரு வாக்கு அதிகம் பெற்றால் அரசியலில் இருந்து செல்கிறோம் - ஈபிஎஸ்க்கு வைத்திலிங்கம் சவால்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரத்தநாட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் பற்றி பேசியதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பதில் அளித்துப் பேசி உள்ளார்.

எங்களை விட ஒரு வாக்கு அதிகம் பெற்றால் அரசியலில் இருந்து செல்கிறோம்.. ஈபிஎஸ்க்கு வைத்திலிங்கம் சவால்
எங்களை விட ஒரு வாக்கு அதிகம் பெற்றால் அரசியலில் இருந்து செல்கிறோம்.. ஈபிஎஸ்க்கு வைத்திலிங்கம் சவால்

By

Published : May 17, 2023, 10:37 AM IST

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளார் சந்திப்பு

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் அதிமுகவில் இணையும் பொதுக் கூட்டம் நேற்றைய முன்தினம் (மே 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஓபிஎஸ், வைத்திலிங்கம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து கடும் விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தஞ்சாவூரில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய வைத்திலிங்கம், “ஒரத்தநாடு தொகுதிக்கு கால்நடை மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி மற்றும் ஐடிஐ கொண்டு வந்துள்ளேன்.

மேலும், பேராவூரணி தொகுதிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லூரி, தஞ்சாவூரில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். ஈபிஎஸ் கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் என்னை திறமையானவர் என்று தேர்தல் பிரசாரத்தில் அவரே சொன்னார்.

அன்றைக்கு நல்ல வாயில் பேசியவர், இன்றைக்கு வேறு வாயாக என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று தன்னுடைய தகுதி, தான் முதலமைச்சராக இருந்தோமே என்ற எண்ணம் கூட இல்லாமல், மரியாதை இல்லாமல் பேசி விட்டுச் சென்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சட்டக் கல்லூரி கேட்டேன். அதற்கு 150 கோடி ரூபாய் செலவாகும், பணம் இல்லை என்று என்னிடம் சொன்னாரா, இல்லையா? தவறான தகவலை ஒரத்தநாடு பொதுக் கூட்டத்தில் பேசி இருக்கிறார். டிடிவி தினகரனை வேட்பாளராக ஆர்.கே.நகர் தொகுதியில் நிறுத்தி, பிரசாரத்தில் ஈடுபட்டவர், ஈபிஎஸ்.

முன்னுக்குப்பின் முரணாக தனக்கு ஆதாயம் என்றால் வாழ்த்தி பேசுவது, இன்றைக்கு அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள் என்று நினைத்து, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் நேற்று பேசியதை மறந்துவிட்டு முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார். அவரை சண்டிக் குதிரை என்று நான் சொன்னேன்.

அதற்கு மூத்த நிர்வாகி காமராஜ் பந்தயக் குதிரை என்று சொல்கிறார். அந்த பந்தயக் குதிரை எந்த தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறது? காமராஜுக்கு அறிவு இருக்கிறதா? ஏதாவது ஒரு தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அவர் பந்தயக் குதிரை. ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

11 மாத காலங்களாக இந்த இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிற ஈபிஎஸ், இந்த இயக்கத்தை விட்டுச்செல்ல வேண்டும். ஈபிஎஸ்ஸை தவிர்த்து இந்த இயக்கம் ஒன்றுபட்டு, சிறப்பாக மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். முதலமைச்சருக்கான தகுதியே இல்லாத ஒரு நபர் என்றால், அது ஈபிஎஸ் தான். நம்பிக்கை துரோகி.

நம்பியவர்களை நடு ஆற்றில் விடக் கூடியவர். ஒன்றரை கோடி தொண்டர்களை தனது சுய லாபத்துக்காக இயக்கத்தை அழிக்க பார்க்கின்றார். அதனால், ஈபிஎஸ்ஸைத் தவிர்த்து இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும். அவர் எங்களை செத்த பாம்பு என்று கூறினார். ஆனால், அவரை நாங்கள் நசுக்கி கொன்ற பாம்பு என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் எங்கு நின்றாலும் எதிர்த்து நாங்கள் நிற்கிறோம். எங்களை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்றாலும், நாங்கள் அரசியலை விட்டுப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை தவிர்த்துவிட்டு அதிமுக ஆட்சிக்கு வர முடியாது - வைத்திலிங்கம்!

ABOUT THE AUTHOR

...view details