தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி தஞ்சாவூர்:அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தஞ்சாவூரில் வைத்து இன்று (பிப்.9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆட்சி அதிகாரம் 4 ஆண்டுகள் இருந்த காரணத்தினால், இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு வித்தை செய்தனர்.
ஜூலை மாத பொதுக்குழுக் கூட்டம் போர்க்களத்திற்கு பிறகு, இவர்கள் யார் என்பதை தாங்களே தங்களைத் தோலுரித்துக் காட்டி விட்டனர். இரட்டை இலை சின்னத்திற்கான செல்வாக்கு குறைந்து வருகிறது. 4 ஆண்டுகளில் சேர்த்த நிதி ஆதாரங்களை அங்கு (ஈரோடு கிழக்கு தொகுதி) இறக்கினாலும், 5,000 அல்லது 10,000 கூடுதல் வாக்குகள் பெற முடியுமே தவிர, இவர்களால் வெற்றி பெற முடியாது.
வரும் காலத்தில், அந்த சின்னம் ஈபிஎஸ் சம்பந்தப்பட்டிருக்கிற வரை தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கை இழக்கும். இரட்டை இலை சின்னத்தை, தேர்தலுக்காக உச்ச நீதிமன்றம் இரக்கப்பட்டுக் கொடுத்துள்ளது. அதிலும் கையெழுத்துப் போடும் அதிகாரம் என்பது அவைத் தலைவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பதவிச் சண்டைதான். அமமுக தொண்டர்கள் திமுகவுக்கும் துரோகிகளுக்கும் வாக்களிக்க மாட்டார்கள். வரும் 12ஆம் தேதி ஈரோடு சென்று வாக்களிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் அதானி பிரச்னை அரசியல் பிரச்சினையாக உள்ளது. அதற்கு மத்திய அரசுதான் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
திமுக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த நேரத்தில் திமுகவிற்கு அதிக நிதி உள்ளது. அந்த நிதியின் மூலம் அறிவாலயத்திலேயோ அல்லது கருணாநிதியின் நினைவிடத்திலேயோ பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் யாரும் எதிர்க்கப் போவதில்லை” என்றார்.
முன்னதாக அமமுக சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈரோடு இடைத்தேர்தலில் பின்வாங்கிய அமமுக.. டிடிவி தினகரன் கூறிய காரணம் என்ன?