தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநராக நீடிக்க ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தின்படி அருகதை அற்றவர் - எம்.எச்.ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு - MNMK Jawahirulla

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதிபரிடமிருந்தும், ரம்மி ஆன்லைன் சூதாட்ட நிர்வாகதிடமிருந்தும் தமிழக ஆளுநருக்கு கைமாறிய தொகை எவ்வளவு என தமிழக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். மேலும் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நீடிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அருகதை அற்றவர் என்று குற்றம்சாட்டி எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஆளுநராக ஆர் என் ரவி நீடிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அருகதை அற்றவர்- எம் எச் ஜவாஹிருல்லா
ஆளுநராக ஆர் என் ரவி நீடிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அருகதை அற்றவர்- எம் எச் ஜவாஹிருல்லா

By

Published : Apr 8, 2023, 9:15 AM IST

தஞ்சை: கும்பகோணம் டி.எஸ்.ஆர் பெரிய கடைவீதியில் உள்ள தங்கும் விடுதியில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக, தஞ்சை வடக்கு மாவட்டம் மற்றும் கும்பகோணம் மாநகரம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் ஆடுதுறை முருகன், பாபநாசம் எம்எல்ஏவும் மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான எம்.எச்.ஜவாஹிருல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நோன்புத் திறப்பு நிகழ்வினை தொடர்ந்து நடைபெற்ற தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களை ஜவாஹிருல்லா சந்தித்தார். அப்போது, “தமிழக சட்டப்பேரவை, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. இதில் தமிழக மக்கள் நலன் காக்க இயற்றப்படும் சட்டங்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து ஒப்புதல் வழங்காமலும், அதனைக் கிடப்பில் போட்டு காலம் கடத்தியும் தமிழக மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது, சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினாலும், அதில் ஆளுநரின் ஒப்புதல் இன்றி சட்டமாக்க முடியாது என்றும், ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தப்பட்டால் அது காலாவதியாகி விட்டது, நிராகரிக்கப்பட்டது என்று தான் பொருள் எனப் பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இப்படி இவர் பேசுவது தார்மீக ரீதியிலும், அரசியல் அமைப்பு சட்ட ரீதியிலும் ஏற்புடையது அல்ல.

அவர் இனி ஒரு நிமிடம் கூட தமிழக ஆளுநராக நீடிக்க அருகதை அற்றவர். மேலும் நேற்றைய அவரது பேச்சில், 30 ஆண்டு கால தூத்துக்குடி நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தைக் கொண்டு போராட்டம் நடத்தப்பட்டது எனப் பேசியுள்ளார். இந்த நச்சு ஆலையினால் எத்தனை பேர் மடிந்தனர், எத்தனை பேர் உடல்நல பாதிப்பிற்குள்ளானார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இவர் எதற்காக திடீரென இப்படி ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகப் பேசுகிறார். ஒருவேளை ஆலை அதிபரிடம் எவ்வளவு தொகை வாங்கினாரோ என தமிழக மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்றும், தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்ள காரணமாக இருக்கும் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் அவரை ரம்மி நிர்வாகிகள் ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்துப் பேசிய போது எவ்வளவு தொகை கைமாறியதோ? அதற்காக தான் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அதனைக் கிடப்பில் போட்டுள்ளார் என்றும் தமிழக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “ஆளுநர் ஆர் என் ரவியின், வரம்பு மீறிய இப்பேச்சுக்களைக் கண்டித்தும், தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டித்தும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி புதன்கிழமை மாலை, ஆளுநர் மாளிகை நோக்கிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எழுச்சியுடன் பங்கேற்று எதிர்ப்பினை பதிவு செய்யும்” என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

இதையும் படிங்க:தஞ்சாவூரில் ஆய்வின்போது பிரதமர் மற்றும் முதல்வர் படம் வைப்பதில் சலசலப்பு

ABOUT THE AUTHOR

...view details