சம்பா சாகுபடி நடக்குமா என விவசாயிகள் அச்சம் - அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி! தஞ்சாவூர்:அதிமுக சார்பில் மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதனையடுத்து தஞ்சாவூரில் நடந்த அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை, முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காமராஜ் தலைமையேற்று நடத்தினார்.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறும்போது, "காவிரி டெல்டா பகுதிகளில் ஆறுகளில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. கிளை வாய்க்கால்கள் வரை தண்ணீர் சென்று சேரவில்லை. அதனால் குறுவை சாகுபடி பயிர்கள் கருகி உள்ளன. விதைப்பு நெல் கருகும் நிலையில் உள்ளது. எனவே, அடுத்து சம்பா சாகுபடி நடக்குமா என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், ''கர்நாடகா அரசிடமிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும். விவசாயிகளைப் பாதுகாக்க முறையாக தண்ணீர் திறக்க வேண்டும். சுமார் 18ஆயிரம் கன அடி தண்ணீர் தடையில்லாமல் முழுமையாக திறக்க வேண்டும்" என்று கூறினார்.
"18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால் மட்டுமே குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியும். மேகதாது அணை இரண்டு மாநிலங்களுக்கு உட்பட்ட பிரச்னை. அதையும் மீறி ஆணையமும் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அணையை கட்டியே தீருவோம் என்று கூறியுள்ளார். நிச்சயமாக அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போல காவிரி பிரச்னையில் உறுதியான இயக்கமாக அதிமுக இருக்கும்.
அதிமுகவிற்கு எந்த காலத்திலும் பின்னடைவு கிடையாது. அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம், ஒருங்கிணைந்த அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். யார், யாரோடு சேர்ந்தாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது" எனக் கூறினார்.
தொடர்ந்து கோடநாடு கொலை வழக்கு குறித்து ஓபிஎஸ் எழுப்பிய கேள்விகள் குறித்துப் பதில் அளித்த அவர், ''கோடநாடு கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்தவர் எடப்பாடி பழனிசாமி தான். அன்றைக்கு மௌனமாக இருந்துவிட்டு இன்றைக்கு அரசியலுக்காக செய்கிறார்'' என்று ஓபிஎஸ்ஸின் கூற்றின் மீது குற்றம்சாட்டினார். மேலும் இக்கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கித் தலைவர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:Rain Alert - மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு: தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு!