தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்தில் எம்பிக்கள் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு சதி" - முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு - thanjavur news

M.K.Stalin: தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு சதி செய்வதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு சதி செய்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்
தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு சதி செய்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 10:54 PM IST

தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு சதி செய்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தி.க சார்பில் பாராட்டு விழா திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் (அக்.06) நடைபெற்றது.

இதில் தி.க தலைவர் கி.வீரமணி தொகுத்த தாய் வீட்டில் கலைஞர் நூலை முதலமைச்சர் வெளியிட, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார். பின்னர், இவ்விழாவில் முன்னாள் நீதிபதி அக்பர் அலி, முன்னாள் மேற்கு வங்க தலைமை செயலாளர் பாலசந்திரன் மற்றும் பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினர்.

பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலமாக தன்னிறைவு பெற்ற மாநிலமாக மலர வேண்டும், உயர வேண்டும். இந்திய மத்திய அரசின் ஆட்சி கருத்தியலாக, கூட்டாட்சி கருத்தியல் மலர வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் ஒருமை பெற்றதாக, அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழியாக உயர்ந்து நிற்க வேண்டும்.

அனைவரின் குரலுக்கும் ஒரே மரியாதையும், மதிப்பும் இருக்க வேண்டும். இதுதான் இந்திய ஒன்றியமும், தமிழ்நாடும் இயங்க வேண்டிய முறை. அத்தகைய கூட்டாட்சி கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம். இது அரசியல் கூட்டணி அல்ல. கொள்கை கூட்டணி. தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு இதனை நாங்கள் உருவாக்கவில்லை.

அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப்போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் செயல்படுகிறோம். தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும், மீட்கப்பட்டே தீர வேண்டும். கல்வி உரிமை, நிதி உரிமை, சமூக உரிமை, மொழி உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைகளுக்கு கேடு விளைவிக்க பார்க்கிறார்கள். மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி நாடாளுமன்றத்தின் எண்ணிக்கையை குறைக்கும் சதி செயலை அரங்கேற்றப் பார்க்கிறார்கள். குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க பார்க்கிறார்கள்.

இந்த எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்று சொன்னால் பொருத்தம். ஆனால் குறையக்கூடாது” என்றார். மேலும், மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு அறிவிப்பை பாஜக முழு ஈடுபாட்டோடு கொண்டு வந்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததற்கு பிறகு, தொகுதி வரையறை முடிந்ததற்கு பிறகு என்று சொல்வது எல்லாம், இதை நிறைவேற்றாமல் இருக்கக்கூடிய தந்திரம் எனக் கூறினார்.

காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீடும் காலி செய்யும் ஆபத்து இதில் இருக்கிறது என்றார். இவ்விழாவில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.எல்.ஏ-க்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட தி.க நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பள்ளி குடிநீரில் புழு.. புகார் கூறி மாணவிகள் மீது தலைமை ஆசிரியர் நடவடிக்கை.. போராட்டத்தில் குதித்த சக மாணவிகள்!

ABOUT THE AUTHOR

...view details