ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சியா? வங்கி ஊழியர்களின் நடவடிக்கையில் சந்தேகம் - வைரலாகும் வீடியோ தஞ்சாவூர்:கும்பகோணம் - தஞ்சை முக்கிய சாலையில் அமைந்துள்ளது, தாராசுரம். இங்குள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில், நேற்று (செப்.30) இரவு பதிவு எண் இல்லாத வேனில் சந்தேகத்திற்கிடமான வகையில் மூன்று நபர்கள் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பணத்தை எடுத்துள்ளனர்.
இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து யாரும் பார்க்கிறார்களா, வருகிறார்களா என்பதை பார்த்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக ஏடிஎம் மையத்தில் இருந்து ஒரு பேக் உடன் வெளியேறி உள்ளனர். இதனையடுத்து, ஏடிஎம் மையத்தில் இருந்து சற்று தள்ளி நிறுத்தி வைத்து இருந்த பதிவு எண் குறிப்பிடாத வேனில் ஏறிச் சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகம் கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த நபர், தான் கண்ட காட்சியை தனது செல்போனில் பதிவு செய்து இருந்ததால் அதனை வைத்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்க, உடனடியாக கும்பகோணம் தாலுகா காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார், சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கியாளர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த ஏடிஎம் மையத்தில் பணம் இல்லாததால் பணம் நிரப்ப வந்தவர்கள் அவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரும் பொதுமக்களுக்கும் நிம்மதி அடைந்தனர்.
இதையும் படிங்க:15 லிட்டர் பால் தரும் எருமை.. இது என்ன ரகம்? விலை எவ்வளவு தெரியுமா?