தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர் சோழபுரம் கொலை வழக்கில் 3 பேர் கைது! - தஞ்சாவூர் செய்திகள்

தஞ்சாவூர் அருகே சோழபுரம் திருஞானசம்பந்தம் கொலை வழக்கில், தொடர்புடைய மேலானமேடு கிராமத்தை சேர்ந்த மூன்று நபரை சோழபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சோழபுரம் கொலை வழக்கில் 3 பேர் கைது
சோழபுரம் கொலை வழக்கில் 3 பேர் கைது

By

Published : Jan 12, 2023, 7:04 AM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் சரகம், மேலானமேடு கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவருக்கும், இராஜேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் நீடித்து வருவதால், அப்போது இவர்களுக்குள் தகராறு மற்றும் மோதல் ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வந்துள்ளது.

கடைசியாகக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இராஜேந்திரன் குடும்பத்தினர் திருஞானசம்பந்தத்தை வெட்டியுள்ளனர், இதில் காயமுற்ற அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையிலும், இவ்வழக்கில் சோழபுரம் காவல் நிலையம் சரியான நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

செவ்வாய்கிழமை பட்டப்பகலில், இராஜேந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சோழபுரம் காவல் சரகம், மண்ணியாற்றங்கரையில் சென்று கொண்டிருந்த திருஞானசம்பந்தத்தை வழி மறித்து வெட்டி படுகொலை செய்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோழபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, திருஞானசம்பந்தத்தின் குடும்பத்தினர், உறவினர்கள், மேலானமேடு கிராமத்தினர், என நூற்றுக்கணக்கானோர் திரண்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு, நேற்று இப்படுகொலையைக் கண்டித்தும், நியாயம் கேட்டும், சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிய சோழபுரம் காவல்துறையினரைக் கண்டித்தும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது, மறியல் காரணமாகப் போக்குவரத்தும் தடைப்பட்டது. கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் ஆய்வாளர் பேபி தலைமையிலான காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமரசம் பேசி, இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், திருஞானசம்பந்தம் கொலை வழக்கில், தொடர்புடைய மேலானமேடு கிராமத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் (55) அவரது மகன் மணிகண்டன் (18) மற்றும் அவரது மாப்பிள்ளை ராஜா (எ) செந்தில்குமார் (32) ஆகிய மூவரைச் சோழபுரம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பால் ஊற்றுவதில் தகராறு... தொழிலாளி வெட்டிக் கொலை

ABOUT THE AUTHOR

...view details