தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரைத் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - Today Kumbakonam Latest News

புகழ்பெற்ற கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Kumbakonam Sarangapani temple
Kumbakonam Sarangapani temple

By

Published : May 4, 2023, 3:51 PM IST

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரைத் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

தஞ்சாவூர் : கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் சித்திரைப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இத்தலத்தில் திருமழிசை ஆழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்து உள்ளார். அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி கோலத்தில் (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) சாரங்கபாணிசுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள் பாலிக்கிறார்.

இந்த திருத்தலம் 'பூலோகத்தின் வைகுண்டம்' என போற்றப்படுகிறது. அதன் காரணமாகவே இங்கு சொர்க்கவாசல் என்ற ஒன்று தனியாக இல்லை. பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்டதால், 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக இந்த சாரங்கபாணி திருக்கோயில் போற்றப்படுகிறது.

6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட நாலாயிரத் திவ்ய பிரபந்தம் எனும் தமிழ் பாடல்கள் தந்த பெருமைமிகு தலம் இது என போற்றப்படுகிறது. இக்கோயிலின் ராஜகோபுரம் 171 அடி உயரம் கொண்டது. இத்தகைய பெருமைபெற்ற சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

நடப்பாண்டுக்கான விழா, கடந்த 26ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் இந்திர விமானம், வெள்ளி சூர்யபிரபை, வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம், வெள்ளி யானை வாகனம், புன்னை மர வாகனம், தங்க குதிரை வாகனம் எனப் பல்வேறு வானங்களில் திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் 9ஆம் நாளில், ஆசிய கண்டத்திலேயெ பிரமாண்டமான பெரியதேராக போற்றப்படும் சித்திரை பெரியத் தேரின் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 500 டன் எடையுடன் 30 அடி விட்டத்தில் 110 அடி உயரத்தில் தேர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த தேருக்கு அடுத்தபடியாக திருவாரூர் ஆழித்தேர் 96 அடி உயரம், 360 டன் எடையுடன் 2ம் இடத்திலும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேர் 95 அடி உயரம் 350 டன் எடையுடன் 3ஆம் இடத்திலும், திருநெல்வேலி ஆனித்தேர் 85 அடி உயரத்தில் 450 டன் எடையுடன் 4ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த திருத்தேரை வடம்பிடித்து இழுக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். இந்த தேரோட்டத்தில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப. தமிழழகன், இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம், சுவாமிமலை கோயில் துணை ஆணையர் உமாதேவி, உதவி ஆணையர் சாந்தா, முன்னாள் எம்எல்ஏ இராமநாதன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம் தொடங்கிய சில அடி தூரங்களிலேயே, உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின் விளக்கில் தேரின் அலங்கார மேல்புறம் உரசி, அத்தேர் நின்றது. இதையடுத்து, மேல் புறத்தில் உள்ள மரக் கட்டுமானங்கள் வாள் கொண்டு அறுத்து அகற்றிய பிறகு, சுமார் 45 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு தேரோட்டம் மீண்டும் தொடங்கியது.

இதையும் படிங்க :AR Rahman: 'தி கேரளா ஸ்டோரி' சர்ச்சை.. கவனத்தை ஈர்த்த ஏ.ஆர்.ரகுமான் ரியாக்‌ஷன்!

ABOUT THE AUTHOR

...view details