தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 03.01.2022 முதல் இருந்து வருகிறார். இவர் அதற்கு முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் கட்டளைத் தம்பிரானாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சுதந்திரச் செங்கோல் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதற்கான விளக்கம் கேட்டும், ஆதீனத்தில் குற்றப் பின்னணி உடைய நபர்களை தங்க வைத்திருப்பதாகவும், இதன் காரணமாக ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆதீனகர்த்தர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு, திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்டு உள்ள அக்கடிதத்தில், ‘சூரியனார் கோயில் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகள், கடந்த 03.01.2022 அன்று பரிபூரணம் அடைந்ததால், திருவாவடுதுறை ஆதீன வழக்கப்படி, ஆதீனத்தில் தம்பிரான் சுவாமிகளாக இருந்து வந்த ஸ்ரீமத் அம்பலவானத் தம்பிரானை, 28வது குருமகா சந்நிதானமாக திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் ஆதீன மரபுகளின்படி, திருவான தீட்சை, ஆச்சாரிய அபிஷேகம் செய்யப் பெற்று, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் என்ற திருநாமம் சூட்டப்பட்டு, பொறுப்பேற்க செய்தருளினார்கள்.
அதன்படி, தாங்கள் சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானமாக பொறுப்பேற்ற பிறகு, சூரியனார் கோயில் ஆதீன மரபுகளையும், திருவாவடுதுறை ஆதீன கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் சிதைக்கும் வகையிலும், சைவ சமயத்திற்கு எதிராகவும், திருவாவடுதுறை ஆதீனத்திற்கும், பாரத தேசத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சுதந்திரச் 'செங்கோலினைப்’ பற்றி தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது தொடர்பாகவும், தங்களைப் பற்றிய தவறான தகவலும், முறைகேடான செய்திகளும் காணொலி வாயிலாகவும், ஒளிநாடாக்கள் வாயிலாகவும் வந்த வண்ணம் உள்ளன.