தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது நாகநாதசுவாமி திருக்கோயில். இது நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி மதிப்பிலான சுமார் 90 ஆயிரம் சதுர அடி இடத்தில் உள்ள 39 வீடுகளை நீதிமன்ற உத்தரவுப்படி அதிரடியாக அகற்றிட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் கோயில் நிர்வாகம் இன்று காலை 8 மணி முதல் கோயிலில் தயார் நிலையில் இருந்தனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தி வைக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவரின் ஒப்புதலின் பேரில் இன்று நடைபெற இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருநாகேஸ்வரம் பேரூர் திமுக கழக செயலாளர் தாமரைச்செல்வன் பேட்டியளித்தார்