தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த வைணவத் திருத்தலம் ஆகும். இந்த கோயிலில் திருமழிசை ஆழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். தாயார் கோமளவள்ளி, ஹேமரிஷி தவம் செய்த தலம், அவர் பெயரால் விளங்கும் ஹேம புஷ்கரணியில் தோன்றிய மகாலட்சுமியை (கோமளவள்ளி) பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக ரதத்துடன் இத்தலத்திற்கு எழுந்தருளி மணம் புரிந்ததாக வரலாறு.
பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக தன்னுடைய ரதத்திலேயே இங்கு வந்ததால், இங்கு கர்ப்பகிரகம் யானை, குதிரை பூட்டிய ரதத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. இது பூலோக வைகுண்டம் எனவும் போற்றப்படுகிறது. பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக 3வது தலமாக ஸ்ரீ சாரங்கபாணித் திருக்கோயில் விளங்குகிறது.
இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் கோமளவள்ளி தாயாருக்கான பங்குனி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் 16 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டு உற்சவம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி செவ்வாய்கிழமை, கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. நாள்தோறும் தாயார் பல்வேறு வாகனங்களில் பிரகார உலா நடைபெற்று வருகிறது.