பிரதமர் ஏன் இன்னும் மணிப்பூர் செல்லவில்லை? - புதுச்சேரி முன்னாள் முதல்வர் தஞ்சாவூர்:புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, இன்று கும்பகோணம் அருகே பிரசித்திபெற்ற துர்கை ஸ்தலமான பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரசுவாமி திருக்கோயில், அறுபடைவீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் மற்றும் மகாமகம் தொடர்புடைய 12 சைவத்திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் மந்திரபீடேஸ்வரியான மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயில் யானை மங்களத்திடம் ஆசியும் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில், 90 நாட்களுக்குப் பிறகு ராகுல் கேட்ட கேள்விகள் எதற்கும், மோடி பதில் அளிக்காமல், காங்கிரஸ் கட்சியைக் குறை சொல்வதிலும், விமர்சனம் செய்வதிலேயே குறியாக இருந்தார். கர்நாடக மாநிலத் தேர்தலுக்காக 20 முறை கர்நாடகம் மற்றும் கேரளா சென்றார்.
மேலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா செல்லும் பிரதமருக்கு இந்தியாவின் அங்கமான, மணிப்பூருக்குச் செல்ல தெரியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு அமைந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என பேசியவர்கள் இன்று மணிப்பூர் மற்றும் ஹரியானா கலவரங்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகள் காலத்தில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்களைக் காப்பாற்றத் தவறவிட்டது.
மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதிலேயே குறியாக இருக்கிறார். அதற்காக பகிரங்கமாக மிரட்டவும் செய்கிறார். புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்கள் எங்களது கொள்கை இருமொழிக் கொள்கை தான் எனவும், புதிய கல்வித் திட்டத்தில், இந்தி மொழி திணிப்பை கண்டித்து நான் முதலமைச்சராக இருக்கும் வரை புதுச்சேரியில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தினேன். தற்போது பாஜகவில் சரணாகதி ஆகி இருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் இதனை அனுமதித்துள்ளார். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, புதிய கல்வி கொள்கையினை ரத்து செய்து தூக்கி எறிவோம். தொடர்ந்து இருமொழிக் கொள்கையை நிலை நிறுத்துவோம்.
மேலும், மோடி தலைமையிலான பாஜக மத்தியில் 9 ஆண்டுகள் காலம் ஆண்ட சாதனை என்பது, 9 மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவிற்கு எதிரான காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகளை கலைத்தது; ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தான். மோடி, அமித்ஷா கூட்டணியின் பாஜகவிற்கு எதிரான மாநில அரசுகளை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ ஆகியவை மூலம் மிரட்டி அச்சுறுத்தி வருகிறது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாகவுள்ளது. இதையே தான் கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன. எனவே 2024ல் இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து மத்தியில் ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பராமரிப்பின்றி கிடக்கும் சாலை மின்விளக்குகள் - விபத்துக்கு வழிவகுக்கிறதா நகராட்சி?