தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீர் பாசனத்தை முறைப்படுத்தக் கோரி திமுக சார்பில் தஞ்சை எம்.பி. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், நீலமேகம் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்; தஞ்சை எம்.பி., கோரிக்கை
தஞ்சை: காவிரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க அரசு கூடுதல் கவனம் செலுத்தி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை எம்.பி. எஸ்.எஸ் பழனிமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிமாணிக்கம், ’மேட்டூர் அணை 100 அடியை தாண்டிய நிலையில் நீர் திறக்கப்பட்டுள்ளதை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் சார்பில் வரவேற்கிறேன். அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நீர்ப் பாசனத் துறை ஆலோசகர் இன்றிலிருந்து ஜனவரி மாதம் மேட்டூர் அணை மூடப்படும்வரை கள நிலவரத்தை அறிந்து அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்து நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஆறுகள், வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத நிலையில் திறந்துவிடப்படும் நீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தாண்டு முக்கொம்பில் ஏற்பட்ட உடைப்பை கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து சீரமைத்து தற்போது கிடைக்கப்பெறும் காவிரி நீர் கடலுக்குள் சென்று கலந்துவிடாமல் கடைமடை விவசாயிகள் வரை பயன்பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.