தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த 55 வயது பெண் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 14ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி அப்பெண்ணுக்கு நுண் துளை (லேப்ராஸ்கோப்பி) மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் சிகிச்சை குறித்துக் கூறும் போது, "தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண் துளை மூலம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை இதுவே முதன்முறையாகும். இரைப்பை, குடல், ஈரல் கணையம் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
அதற்குத் தகுந்த மிகவும் சிக்கலான உயரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஆண்களில் ஒரு லட்சம் பேரில் 14 பேருக்கும், பெண்களில் ஒரு லட்சம் பேரில் 10 பேருக்கும் கணைய புற்றுநோய் ஏற்படுகிறது. கணைய புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை தான் முதன்மையான தீர்வை கொடுக்கிறது. ஆனால், இந்த அறுவை சிகிச்சையானது மிகவும் சிக்கலான, சவாலான காரியமாக உள்ளது.
மஞ்சள் காமாலையோடு வரும் நோயாளிகள் அறுவை சிகிச்சையின் போது அதிக ரத்த இழப்பு, ரத்த நாளங்களில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய காயம், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படக்கூடிய மற்ற உடல் ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். இந்நிலையில், தற்போது முதன்முறையாக மிகவும் உயரிய மேம்படுத்தப்பட்ட சிகிச்சையான நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் மன்னார்குடியை சேர்ந்த பெண்ணுக்குச் சிகிச்சை அளித்துள்ளோம்.