தஞ்சாவூக் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முத்தம்பாள்புறத்தில் காசி விசுவநாதர் கோயில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோயிலில் உற்சவ மூர்த்தி சிலைகள், கற்சிலைகள் உள்ளன. இந்நிலையில், கோயில் செயல் அலுவலர் சுரேஷ், கோயிலுள்ள சிலைகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது 24 உற்சவ சிலைகளும், 60 கற்சிலைகளும் இருந்தன.
சொத்து பதிவேட்டின்படி இந்த எண்ணிக்கை சரியாக இருந்தாலும், கோயிலில் ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு ஆய்வு செய்தபோது, ஒரு சிலையில் மாற்றம் தெரிந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்த உற்சவ மூர்த்தியான காலசம்ஹார மூர்த்தி சிலை திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலை வைத்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்த சிலை பல லட்சம் ரூபாய் மதிப்புடையது என்பதும் தெரியவந்துள்ளது.