தஞ்சாவூர்:தஞ்சையை அடுத்த கரந்தையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கருணாசாமி என்ற பெரியநாயகி அம்மன் உடனாகிய வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரம் அன்று ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.
அதேநேரம், இந்த திருக்கல்யாணம் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிகழ்வாகும். அந்த வகையில், நேற்று (மே 20) மாலை ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகம் வளர்த்து, ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் சுவாமி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து, மாங்கல்ய தாரணம் மற்றும் சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாக, கருங்குஷ்ட நோயினால் துன்பப்பட்ட சோழ மன்னனுக்கு சிவனார் வேங்கை வடிவில் தோன்றி விரட்டிய பின், அருகில் இருந்த குளத்தில் மறைந்து விட, அரசன் அக்குளத்தில் மூழ்கி எழுந்ததும் அரசனுக்கு இருந்த குஷ்ட நோய், ஈசனின் கருணையால் நீங்கப்பெற்ற கோயிலாக கருதப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரும், அருந்ததியும் தம்பதியராக சிவபெருமானை பூஜித்த சிறப்புப் பெற்ற கோயிலாகவும் கூறப்படுகிறது. சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலில் உள்ள நடராஜர் திருவாசியில், எங்கும் ஒட்டாமல் முயலகன் மீது பதித்த வலது திருப்பாதத்தின் பிடிமானத்தில் மட்டும் ஆடிய பாதமாக காட்சியளிப்பது வேறு எங்கும் காண இயலாத காட்சியாக உள்ளது.