தஞ்சாவூர்:மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் படித்த இளைஞர்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நேற்று (பிப்.12) அறிவித்துள்ளார். படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக ஆக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ( NEEDS) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சியைக் கல்வித் தகுதியாகப் பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு மூன்று வாரக் கால, தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர் வங்கிகள் (அ) தொழில் முதலீட்டுக் கழகம் (Industrial Investment Corporation TN ) மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் (மானியம் ரூ.503.00 லட்சம்) என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.500 லட்சம் வரையிலான உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (மகளிர் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ், தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்குத் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.75 லட்சம் வரை) முதலீட்டு மானியம் 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும். சிறப்பு பிரிவினரான மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவினால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 சதவீதம் மானியம் திட்ட மதிப்பீட்டில் வழங்கப்படும். ஆர்வமுள்ள படித்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/needs ஆகும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும், தொலை பேசி எண் - 04362 257345, 255318. எனவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்கள் கல்வி கற்றால் குடும்பமே முன்னேறும் - அரியலூர் கலெக்டர்