தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருப்பது அதிராம்பட்டினம் கிராமம். இந்தப் பகுதியை அதிவீரராம பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்ததனால் இந்த ஊருக்கு அதிவீரராம பட்டினம் என்ற பெயர் உருவானது.
நாளடைவில் இந்தப் பெயர் மாறி அதிராம்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊர் மன்னர்கள் ஆட்சி செய்த பகுதி என்பதால் இந்த பகுதியில் அந்த காலகட்டங்களில் மன்னர்கள் பயன்படுத்தும் குதிரைகளை விற்பனை செய்ய மிகப்பெரிய குதிரை சந்தை உருவானது.
இந்த குதிரை சந்தைகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு குதிரைகளை வாங்கிச் செல்ல இங்கு வியாபாரிகள் முகாமிட்டு குதிரைகளை வாங்கிச் செல்வர். அதேபோல் சவுதி அரேபியா, குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்தும் குதிரைகளை இங்கு கொண்டு வரவும், இங்கு வாங்கிய குதிரைகளை மீண்டும் அங்கு எடுத்துச் செல்லவும் கடல் வழியை அப்போதைய காலகட்டங்களில் பயன்படுத்தி வந்தனர்.
இதற்காகவே அதிராம்பட்டினத்தில் மிகப்பெரிய கப்பல் துறைமுகம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், மன்னர் காலம் முடிந்து ஆங்கிலேயர் காலம் தொடங்கியதும் ஆங்கிலேயர் காலத்திலும் இந்த குதிரை சந்தை மூலமாக குதிரை வணிகம் அமோகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. நாளடைவில் கார் உள்ளிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் வந்ததை அடுத்து குதிரையின் தேவை குறைந்துபோனது.