தஞ்சாவூர் மாவட்டம் விளார் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு மதுப்பானக்கடையில் பணியில் இருந்த விற்பனையாளர் சிவக்குமார், சீனிவாசன் ஆகியோர் மது விற்பனையான பணத்தை கணக்கு பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மதுபானக்கடை வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கல்லால் தாக்கி உடைத்தனர். இதையடுத்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடையின் பக்கவாட்டு கதவு வழியாக உள்ளே புகுந்து ஊழியர்களிடமிருந்து மூன்று லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
தொடர்ந்து, ஊழியர்கள் கொள்ளையர்களை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து, மேற்பார்வையாளர் பாஸ்கரன் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதுபானக்கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.