தஞ்சை:தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரா - தேசிய அறிவியல் நாள் விருதுகள் வழங்கும் விழா நேற்று (பிப்.28) நடைபெற்றது. அப்போது, இந்திய அறிவுசார் அமைப்புகளில் சிறந்த பங்களிப்பு செய்த மணிப்பால் உயர்கல்வி அகாடமி பேராசிரியர் எம்.எஸ்.வலியதனுக்கு சாஸ்த்ரா - மகாமனா விருதும், இயற்பியலில் சிறந்த பங்களிப்பு செய்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர் எஸ்.ராமசாமிக்கு சாஸ்த்ரா - ஜி.என்.ராமச்சந்திரன் விருதும், உயிர் அறிவியலில் சிறந்த பங்களிப்பு செய்த மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி) பேராசிரியர் சமீர் கே.மாஜிக்கு சாஸ்த்ரா - ஒபைடு சித்திக் விருதும், வேதியியல் மற்றும் உலோக அறிவியலில் சிறந்த பங்களிப்பு செய்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர் எஸ்.நடராஜன், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி) பேராசிரியர் டி. பிரதீப் ஆகிய இருவருக்கு சாஸ்த்ரா - சி.என்.ஆர்.ராவ் விருதுகளும், தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு மடலும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை டாடா எலக்டிரானிக்ஸ் நிறுவன (பேப் மற்றும் ஓசாட் பிரிவு) தலைவர் சரண் குருமூர்த்தி வழங்கி பாராட்டினார். மேலும், விருது பெற்றவர்களின் பாராட்டு மடலும் வாசிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 10 பள்ளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வக சாதனங்கள் வழங்கப்பட்டன.