தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 வயது சிறுவனுக்கு மூளை புற்றுநோய்; அதிநவீன சிகிச்சை செய்து தஞ்சை அரசு மருத்துவர்கள் சாதனை

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனுக்கு அதிநவீன சிகிச்சை அளித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

By

Published : Jun 27, 2023, 10:53 PM IST

Etv Bharat
Etv Bharat

அதிநவீன சிகிச்சை செய்து தஞ்சை அரசு மருத்துவர்கள் சாதனை

தஞ்சாவூர்:மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அதிநவீன சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், 15 நிமிடங்கள் முறையே 5 நாட்களுக்குள் இந்த சிகிச்சை நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்த மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனையடுத்து புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு மருத்துமனையில் அதிநவீன கருவிகளும் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் ரூ.25 கோடிக்கு மேலான மதிப்புள்ள அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு கருவிகளான Linear Accelerator, Telecobalt, Brachytherapy போன்றவை மற்றும் Radiation Oncology எனப்படும் புற்றுநோய் கதிர்வீச்சு துறையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூளை புற்றுநோயால் (Brain Cancer) பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. Pituitary என்ற முக்கியமான பகுதிக்கு அருகில் கட்டி இருந்ததால் முழுமையாக அதனை அகற்றப்படவில்லை.

இதனால், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட சிறுவனை அவரது பெற்றோர் அழைத்து வந்த நிலையில், சிறுவனுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்ததில் பாதி புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைத்து புற்றுநோய் மருத்துவர்களும் Tumour Board-ல் கலந்தாலோசித்து SRT (Stereotactic Radiotherapy) என்ற அதிநவீன சிகிச்சை முறை செய்ய முடிவெடுத்தனர். அதன்படி மிக நுண்ணியமாக, புற்றுநோய் கட்டியை மட்டும் அழிக்கக் கூடியLinear Accelerator என்ற கருவியில் மிக சிறப்பான சிகிச்சை மருத்துவர்கள்களால் இன்று (ஜூன் 27) செய்யப்பட்டுள்ளது.

மேலும் மிக முக்கியமான கண், இதயம், நுரையீரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்காத முறையில் மருத்துவர்கள் மற்றும் இயற்பியலாளர்கள் மிக நுண்ணியமாக கம்ப்யூட்டரில் சிகிச்சை முறையை திட்டமிட்டு இந்த சிகிச்சை செய்தனர். இந்த முறையில் ஐந்து நாட்கள் மட்டுமே கதிர்வீச்சு முறையில் சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுவனுக்கு இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.

இந்த சிகிச்சை முறை தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இந்த சிகிச்சை முறை குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான அதிநவீன சிகிச்சை இரண்டாவது முறையாக தற்போது 4 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டது. 3 நிமிடங்கள் மட்டுமே இந்த சிகிச்சை செய்த நிலையில், தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு 15 நிமிடங்கள் சிகிச்சை முடிந்துவிடும் என்று கூறினார்.

இந்த நிலையில், சிறுவன் எந்த தொந்தரவும் இல்லாமல் இயல்பான நிலையில் வழக்கமான உற்சாகத்துடன் இருப்பார் என்றும் மேலும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு அதிநவீன கருவிகள் உள்ளதால் நோயாளிகள் அதிநவீன சிகிச்சை முறையை பயன்படுத்திக் கொள்ளுமாறும்' கேட்டுக்கொண்டார். புற்றுநோய் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் விஜயகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரும் அப்போது உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் எனும் கொடூரன்.. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பகீர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details