தஞ்சாவூர் : பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (மே. 8) வெளியான நிலையில் தஞ்சாவூரில் உள்ள பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகள், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்று சாதனைப் படைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. மாநில முழுவதும் ஏறத்தாழ 8.8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். இந்நிலையில் நேற்று (மே. 8) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
அதில் தமிழ்நாட்டில் மொத்தம் 94.3 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதிகளவில் தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் மாணவர்கள் 91.45 சதவீதமும், மாணவிகள் 96. 38 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றனர்.
மாணவர்களைவிட மாணவிகளே 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சிப் பெற்றனர். தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி என்பவர், பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தைப் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்தார்.
அதுபோன்றதொரு சாதனையை தஞ்சாவூரில் உள்ள அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகளும் படைத்து உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வினை ஆண்கள், பெண்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 37 பேர் எழுதினர். அதில் 25 ஆயிரத்து 734 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.