தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம்- பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது.
தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர். புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத்தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேரை அதன் தேர் நிலை சேரும் இடத்திற்கு செல்வதற்காக தேரை திருப்பிய போது தேரின் அலங்கார தட்டி எதிர்பாரா விதமாக, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் உரசியது.
விபத்திற்கான காரணம்:தேர் ஊர்வலம் முடிந்த பிறகு தேரை அதன் நிலை இடத்திற்கு கொண்டு செல்வதற்காக திருப்பியுள்ளனர். அந்த நேரத்தில் சாலையின் ஓரமாக இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது இரும்பினால் செய்யப்பட்டிருந்த தேரின் அலங்காரத் தட்டு உரசியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேரின் மீது நேரடியாக மின்சாரம் பாயந்ததில் அருகில் இருந்தவர்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மின்சாரம் பாய்ந்ததில் சிலர் தூக்கி எறியப்பட்டனர். உதவ சென்ற சாமிநாதன் என்பவரும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.