தஞ்சாவூர்: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை சற்றே குறைந்து இருந்த பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இதற்கு பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணியாததும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காததும்தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் கீழவாசல் முக்கிய கடைவீதி பகுதிகளில் கடை கடையாக சென்று முக கவசம் அணிந்து இருக்கின்றனரா, தகுந்த இடைவெளியை கடைபிடிக்கின்றனரா என ஆய்வு மேற்கொண்டார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியர் இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கரோனா பரவல் அதிகரிக்க காரணம் பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காததுமே காரணம். பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது என்பது கடினமான காரியம்.
மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகள் அடைக்கப்பட்டு, அவர்கள் வெளியே வராதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: 500 ரூபாய் மீனுக்கு 100 ரூபாய் பெட்ரோல் இலவசம் - கலக்கும் விற்பனை