தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே சுவாமிமலையை அடுத்துள்ள அலவந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று, தமிழ் தேசிய பேரியக்கத்தின் ஒன்பதாவது பொதுக்குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமைப் பொறுப்பேற்ற பெ.மணியரசன் பேசுகையில், “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில், சிப்காட் வரிவாக்கம் 3வது அலகு பணிகளுக்காக சுமார் 3,174 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்த முயன்று வருகிறது. இதற்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வது என்பது, ஆட்சியாளர்களின் வன்முறையாக உள்ளது.
இதே போன்று, விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக பரந்தூரில் 20 கிராமங்களைச் சேர்ந்த 5,500 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தவும் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனைக் கைவிட வேண்டும். விமான நிலையம் தேவைதான், ஆனால் இதற்கு மாற்றாக விளை நிலங்கள் அழிக்காமல், பிற காலி தரிசு இடங்களை இதற்காகத் தேர்வு செய்து கையகப்படுத்த வேண்டும்.
இதனைக் கண்டித்து வருகிற 30ஆம் தேதி தஞ்சாவூர் ரயிலடி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். செங்கல்பட்டில் துவங்கும் சித்த மருத்துவக் கல்லூரிக்கு திருமூலர் பெயர் சூட்ட வேண்டும். மேலும், தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனையினை திருச்சியில் அமைக்க தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அதேபோல் இதற்கு முன் ஆட்சி செய்த அரசுகள், பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமே தவிர, நடுநிலையாக செயல்படுவதாக கூறிக்கொள்ளும் மத்திய அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது. மேலும் வருகிற 29ஆம் தேதியுடன் திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் ஒராண்டு நிறைவுடையவுள்ளது.
ஆனால், அந்த விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மற்றும் மோசடியாக பெறப்பட்ட வங்கிக் கடன் தொகையையும் ஆலை நிர்வாகம் திரும்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து செய்வது ஏற்புடையது அல்ல” என்றார். கூட்டத்தில் இயக்க பொதுச் செயலாளர் கி.வெட்கட்ராமன், பொருளாளர் ஆனந்தன், துணைத்தலைவர் முருகானந்தம் மற்றும் இயக்க நிர்வாகிகள் பலர் இந்நிகழ்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தமிழீழ மாவீரர்கள் தினத்தில் சமூக நீதி காவலர் வி.பி.சிங்கிற்கு சிலை திறப்பு! - முதலமைச்சர் திறந்து வைப்பு!