தஞ்சாவூரில் தமிழக நடுகல் மரபுக் கண்காட்சி..! கல்லூரி மாணவர்கள் ஆர்வம் தஞ்சாவூர்: உலக பாரம்பரிய வாரம் ஆண்டு தோறும் நவம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மஹாலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மற்றும் யாக்கை மரபு அறக்கட்டளை ஆகியவை இணைந்து தமிழக நடுகல் மரபுக் கண்காட்சியை ஒரு வார காலத்திற்கு நடத்தி வருகிறது.
நடுகல் என்பது போர் மற்றும் கால்நடை பூசலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக ஊரின் நடுவில் நடப்படுவது ஆகும். வீரன் இறந்த இடம், வீரனின் வீடு, ஊர் பாதை ஓரம், ஊரின் எல்லை, ஊரில் உள்ள பெரிய மரத்தின் கீழ் மற்றும் ஊர் கோயில் போன்ற இடங்களில் தமிழக நடுகல் மரபைக் காணலாம்.
மேலும் விலங்குகளால் தொல்லை ஏற்பட்டபோது ஊரைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்த வீரர்களுக்கும் நடுகல் நடப்பட்டுள்ளது, பெண்களுக்கு என எடுக்கப்படும் கல்லினை சதிக்கல் என்று கூறப்படுகிறது. நடுகல் பற்றிய இலக்கியச் சான்றுகளைச் சங்க இலக்கியம், தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்கள் கூறுகின்றன.
இதுமட்டும் அல்லாது, நடுகல்லில் பொறிக்கப்பட்ட எழுத்தின் வளர்ச்சியினை கல்வெட்டு வழி அறியலாம். நடுகற்கள் தென்னிந்தியாவில் அதிகமாகவும் இந்தியாவின் மேற்கு பகுதியில் பரவலாகவும் உள்ளன. தமிழக நடுகற்களில் காணப்படும் கூறுகளைக் கொண்டு அரிகண்டம், ஆனேறு தழுவுதல், கோழி நடுகல், சதிக்கல், தூங்குதலை, நினைவுக்கல், புலிக்குத்திக்கல், மாலக்கோயில், யானைக் குத்திக் கல், வீரக்கல் என்று 23 வகையாக அடையாளப் படுத்தப்படுகிறது.
இதுகுறித்து யாக்கை மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த வெங்கடேஷ் கூறுகையில், "தமிழகம் முழுவதும் பயணித்து இதுவரை 1,345 நடுகற்கள் ஆவணப்படுத்தி உள்ளோம். மேலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுகற்கள் ஊர் பகுதிகளில் இருக்கலாம். சங்ககாலத்தில் இருந்து தொடரும் தொன்மையான நடுகல் மரபு குறித்த அறிமுகத்தை அளிக்கும் வகையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்கால ஆய்வுக்குப் பயன்படக்கூடிய வகையிலும் பொதுமக்கள் தங்களது பகுதியில் காணப் பெறும் இத்தகைய மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இக்கண்காட்சி அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்
தற்போது தஞ்சாவூரில் நடைபெறும் தமிழக நடுகல் மரபுக் கண்காட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடுகற்களின் படங்கள், வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியினை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்காட்சியினை பார்வையிட்டனர். இக்கண்காட்சி வரும் 25ந் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நீரிலும், நிலத்திலும் செல்லும் ஹோவர் படகு.. கோவையில் உள்ள தனியார் நிறுவனம் அசத்தல்!