தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்த சஷ்டி விழா; சுவாமிமலையில் சூரனை வதம் செய்த சுவாமிநாதசுவாமி!

Kanda Shashti Festival at Swamimalai: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Kandha Sashti Festival at Swamimalai
கந்த சஷ்டி விழா சுவாமிமலையில் சூரனை வதம் செய்த சுவாமிநாதசுவாமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2023, 12:08 PM IST

கந்த சஷ்டி விழா சுவாமிமலையில் சூரனை வதம் செய்த சுவாமிநாதசுவாமி

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள கட்டுமலை கோயிலான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இங்கு பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது தமிழ் வருட தேவதைகள், அறுபது படிக்கட்டுகளாக இருந்து, இத்தலத்திற்கு வருகை தரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக நம்பப்படுகிறது.

இந்தக் கோயிலில்தான் முருகப்பெருமான், தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப்பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்ற பெருமை கொண்டு, சுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால், இக்கோயில் முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமி என பெருமையாகப் போற்றப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறந்தது, நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற பெருமை கொண்ட கோயில் இதுவாகும். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டும் கந்த சஷ்டி விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.

விழாவின் 6ஆம் நாளான நேற்று (நவ.18), சஷ்டியை முன்னிட்டு அதிகாலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் வந்து மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு அர்ச்சனைகள் செய்தும், தீபங்கள் ஏற்றியும் தரிசனம் செய்தனர். மேலும், நேற்று (நவ.18) நண்பகல் உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சண்முகசுவாமிக்கு விசேஷ அபிஷேகத்துடன், 108 சங்காபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நேற்று (நவ.18) இரவு அன்னை மீனாட்சி சன்னதி எதிரே, அன்னை மீனாட்சியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நிற்க சிறப்பாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பஞ்ச ஆர்த்தி செய்யப்பட்டு, ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருகப்பெருமான் சன்னதி தெருவில் வானவேடிக்கைகளுடன் பவனி வர, அங்கு சூரனை அழிக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி, தேரடி அருகே ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதனை அடுத்து, இரவு தங்க மயில் வாகனத்தில் சண்முகசுவாமி திருவீதியுலா நடைபெற்றது. இன்று (நவ.19) சண்முகசுவாமி தேவசேனா திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. அதன் பிறகு, தொடர்ந்து 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்ற பின்னர், நவம்பர் 23ஆம் தேதி சண்முகசுவாமி யதாஸ்தானம் சேர்தலுடன் இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி... விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்!

ABOUT THE AUTHOR

...view details