தஞ்சாவூர்:ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கிழையூரைச் சேர்ந்தவர் கண்ணன் (48). இவர், வெளிநாட்டில் வேலை பார்த்துவந்துள்ளார். இவரது மனைவி குமுதவள்ளி (36). 2016ஆம் ஆண்டு முதல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதில், இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்துவந்தனர்.
பின்னர், 2019ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பிய கணவருடன் குமுதவள்ளி பேசிவந்த நிலையில், மீண்டும் கடந்த பத்து நாள்களாகப் பேசாமல் இருந்துவந்துள்ளார். இந்நிலையில். நேற்று முன்தினம் (செப். 9) வழக்கம்போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கண்ணன் குமுதவள்ளியின் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
அரிவாளால் வெட்டப்பட்டு முகம் சிதைந்த பெண்ணுக்கு 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இதில், முகம், தாடையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டு, தாடை துண்டான நிலையில், குமுதவள்ளி அன்று இரவு ஏழு மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய மருத்துவக்கல்லுாரி முதல்வர் ரவிக்குமார், "குமுதவள்ளி இரவு 7 மணிக்கு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார். உடனடியாக, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது.
அதன்படி, முக அறுவை சிகிச்சை வல்லுநர் மனோகரன், பொது அறுவை சிகிச்சை வல்லுநர் அழகர்சாமி, மயக்க மருந்து வல்லுநர் இனியா, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை வல்லுநர் கணேஷ்குமார் அடங்கிய குழுவினர், அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
அந்தப் பெண்ணுக்கு மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் தொண்டையில் குழாய் பொருத்தி அதன் வழியாக மூச்சுவிட நடவடிக்கை மேற்கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பழைய நிலைக்கே முகம் வந்துவிடும். இருப்பினும் அந்தப் பெண் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறார்.
தனியார் மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை மேற்கொண்டிருந்தால் சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு ஏற்பட்டிருக்கும்" என்றார். இந்தக் கொலை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்து கண்ணனை ஒரத்தநாடு காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க:பெண்ணின் நெஞ்சுக்கூட்டில் அரியவகை கட்டியை அகற்றி சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை