தஞ்சாவூர்:கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கார்த்தி தனியார் பள்ளி குழுமம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய உணவு திருவிழா இன்று(அக்.19) கோலாகலமாகப் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
பள்ளி நிறுவனர் கார்த்திகேயன், தாளாளர் பூர்ணிமா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஏராளமான சின்னஞ்சிறுவர், சிறுமியர்கள் யானை சவாரி, குதிரை சவாரி மற்றும் ஒட்டக சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
மேலும் பள்ளி குழந்தைகள் ஏராளமான பாரம்பரிய உணவுகளான முறுக்கு, அதிரசம், சீடை ஆகியவற்றைத் தயார் செய்து கொண்டு வந்து காட்சிப்படுத்தி மும்மரமாக விற்பனை செய்து கல்லா கட்டினர்.
மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோரும், அவர்களுடன் போட்டிப்போடும் வகையில் பாரம்பரிய உணவுகளான வாழைப்பூ வடை, சிவப்பு அவல் பாயசம், கொண்டைக்கடலை சுண்டல், பயிறு, கடலை பருப்பு, பாசிப்பயறு, கேழ்வரகு அடை, கெட்டி உருண்டை, சீனி உருண்டை, ரவா உருண்டை, லட்டு, குலோப் ஜாமூன், தேங்காய் பர்பி, ஜீனி மிட்டாய், பஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய், குழிப்பணியாரம், பருப்பு பணியாரம் என நூற்றுக்கணக்கான பாரம்பரிய உணவு பண்டங்களை, பதார்த்தங்களை அழகாகக் காட்சிப்படுத்தி அசத்தியதுடன், அதனை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.