தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகரில் இன்று காந்தி பார்க், மகாமககுளம், தஞ்சை முக்கிய சாலை, பொற்றாமரைக்குளம், தாராசுரம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் ஆர்டீஓ (வட்டார போக்குவரத்து துறை அலுவலக) லஞ்சம் குறித்து பழையாறை சோழர்கள் என்ற பெயரில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு ஆய்வாளராக பணியாற்றுபவர் தாமரைச்செல்வனா அல்லது அலுவலக உதவியாளர் கபிலனா ? என்ற ரீதியிலும், லஞ்ச பணமழையில் கும்பகோணம் ஆர்டீஓ அலுவலகம் என்ற தலைப்பிலான இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசின், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, மத்திய அரசின் வருமானவரித்துறையும் நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது மாதம் ஒன்றுக்கு அலுவலக உதவியாளர் கபிலன் மட்டும் லஞ்சமாக ரூபாய் 5 லட்சம் பணத்தை கல்லா கட்டுவதாக பகிரங்கமாக குற்றச்சாட்டும் இதில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆர்டீஓ அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது, சமீபத்தில் அலுவலகத்திற்குள் வர முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் பதிவெடு வைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யப்பட்ட பிறகே உள்ளே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சுவரொட்டி ஒட்டியுள்ளதாக கூறுகின்றனர்.