தஞ்சாவூர்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தைச் சேர்ந்தவர் குமார் (21). இவர் அறுவடை இயந்திர ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நாகை மாவட்டத்தில் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டு, சின்ன சேலம் செல்லும் வழியில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தபோது, சிறுநீர் கழிக்க சற்று இருளான பகுதிக்கு ஒதுங்கி உள்ளார். அப்போது அங்கு மறைவில் நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரிடம் செல்போன் மற்றும் ரொக்கப் பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளது.
அவர் மறுக்கவே, மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் அவரின் முதுகு, தோள்பட்டை, கை முட்டி, கால் முட்டி ஆகியவற்றை வெட்டி, அவரை நிலைகுலையச் செய்து, அவர் கீழே சரிந்தவுடன் அவரிடம் இருந்த செல்போன், ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடி உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் மேற்கு போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, படுகாயமுற்ற குமாரை கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் குமார், தனது சொந்த ஊரான சின்ன சேலத்திற்கு, நண்பர் ஒருவர் உதவியோடு புறப்பட்டுச் சென்றார்.