நவநாகரீக வாழ்க்கையால் நலிவடைந்து காணப்படும் மண்பானை தொழில் தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே தஞ்சை மாவட்ட எல்லை பகுதியான நீலத்தநல்லூர் கிராமத்தில், 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகள் வரை சிறப்பாக சென்று கொண்டிருந்த மண்பாண்ட தொழில், பொதுமக்களின் நவநாகரீகத்தின் மீதான மோகத்தால், அலுமினியம், எவர்சில்வர் பயன்பாடு அதிகரித்துள்ளது. மண் பானை, சட்டி, குடிநீர் பானை மண் அடுப்பு ஆகியவற்றின் தேவை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.
அரசு மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் தங்கள் தேவைக்கு ஏற்ப களிமண் எடுத்துக்கொள்ள அனுமதித்த போதும், தற்போது அங்கு களிமண் கிடைப்பதே இல்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குளங்கள், ஏரிகள் எல்லாம் தற்போது மணலாகவே காட்சியளிக்கின்றன. இதனால், தனியார் நில உரிமையாளர்களிடம் பணம் கொடுத்து களிமண் எடுக்க வேண்டிய நிலைக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், ஒரு டிப்பர் லாரிக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்தி 500 வரை செலவாகிறது என்றும், கையால் சுற்றும் திருவைக்கு பதிலாக, மாநில அரசு மின் திருவை வழங்கிய போதும், விவசாயிகளுக்கு வழங்குவது போல இத்தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்கிடவும் இத்தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக மண்பாண்டங்கள் உற்பத்தி செய்துவரும் மகாலிங்கம் கூறுகையில், 'நாங்கள் எங்களது தாத்தாவின் காலம் முதலே இந்த மண்பாண்ட தொழில் செய்துவருகிறோம். மண்பாண்டங்கள் மீதான மோகம் குறைந்து கொண்டே வரும் நிலையில், ஒரு பானை சுமார் ரூ.100 மட்டுமே விற்பனையாவதால் எங்களுக்கு இது கட்டுபடியாகவில்லை. பாரம்பரியத்தை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல முடியாமலும், அயராத உழைப்புக்கு போதிய லாபம் கிடைக்காமல் கஷ்டமாக உள்ளது. இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கும் செல்ல முடியவில்லை. இதனால், தினமும் வாழ்வாதாரத்திற்காக சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.
ஆகவே, இந்த மண்பாண்ட தொழிலையே நம்பியுள்ள எங்களுக்கு தமிழ்நாடு அரசு சலுகை அளிக்க வேண்டும், சூளை வைக்கும் இடத்திற்கு கொட்டகைகள் அமைக்க வங்கிகள் மூலம் கடன் பெற்றுத்தர ஏற்பாடு செய்யவேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளார்.
இது குறித்து சாமிதுரை கூறுகையில், 'எனது 15 வயதில் இந்த மண்பாண்ட தொழில் ஓஹோவென ஓடியது. ஒவ்வொரு ஆண்டும் வரும் பொங்கல் பண்டிகையை நம்பிதான், இந்த மண்பாண்ட தொழிலை செய்துவருகிறோம். முன்பு இருந்ததைப் போல, இதற்கு வேண்டிய மண் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை. இதற்கு அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதைப் போல, மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் இலவசமாக மின் விநியோகம் செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு அனைத்து மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'பொதுமக்களின் மனநிலையும், உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு மீண்டும் மண்பாண்டங்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே அழிவின் விளம்பிற்கு சென்று கொண்டிருக்கும் மண்பாண்ட தொழில் துளிர்விட்டு தழைக்க ஓர் வாய்ப்பு ஏற்படும் என மண்பாண்ட உற்பத்தியாளர்கள் அரசிற்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வழக்கமாக கார்த்திகை, ஐப்பசி, மார்கழி என 3 மாதங்கள் பொங்கல் பானை, சட்டி தேவையும்; அதன் பிறகு தை, மாசி, பங்குனி ஆகிய 3 மாதங்களில் குடிநீர் பானைகள் தேவையும் அதிகரித்து காணப்படும். தற்போது, பொங்கல் பானைகள் தயார் செய்யும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
ஒரு படி முதல் 8 படி வரை, பொங்கல் பானைகள் தயார் செய்ய முடியும் என்றாலும், இன்று குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பது குறைந்து கொண்டே வருவதால், 4 படி வரை மட்டுமே பொங்கல் பானைகள் தயார் செய்வதாக இத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். மேலும், தற்போது ஒரு படி பானை ரூபாய் 50 என்றும், 4 படி பானை ரூபாய் 200 வரை விற்பனை செய்து வருகிறோம்' என்றார்.
இதையும் படிங்க: கும்பகோணம் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் பயங்கர சத்தத்துடன் கசிவு! அலறிய பொதுமக்கள்