தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் சரகத்திற்குட்பட்ட அத்தியூர் கீழத்தெருவை சேர்ந்த குமார் (40) அங்குள்ள இமயவர்மன் என்பவரது செங்கல் சூளையில் கல் அறுக்கும் பணி செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு செங்கல் சூளைக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சைக்களில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது சைக்கிள் மட்டும் செங்கல் சூளை அருகே நின்றுள்ளது குமார் காணாமல் போனது குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அவரது மனைவி ஜெயந்தி புகார் அளித்தார்.
இதற்கிடையில் இரு நாட்களுக்கு பிறகு செங்கல் சூளை அருகேயுள்ள சோளக்காட்டில், உடலில் பல இடங்களில் இரத்த காயங்களுடன் குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகம் கொண்டனர்.
இதையடுத்து, திருப்பனந்தாள் காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா, செங்கல் சூளை உரிமையாளர் இமயவர்மனின் தூரத்து உறவினர் என்பதால் காவல்துறையினர் இதனை தற்கொலை வழக்காக மாற்றிட முயற்சி செய்வதாக கூறி, இச்சம்பவத்திற்குரிய நீதி வேண்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு குமார் குடும்பத்தினரும், அவரது உறவினர்களும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது,