மகளிர் உரிமைத்தொகை தாமதம் மற்றும் நிராகரிப்பு காரணமாக தமிழகத்தில் விரைவில் அதிமுக ஆட்சி அமையு தஞ்சாவூர்: கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான காமராஜ் தலைமையில், புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள தஞ்சை கிழக்கு மாவட்ட, மாநகரச் செயலாளர் மற்றும் ஜெ.பேரவை மாநில இணைச் செயலாளர் ஆகியோர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காமராஜ், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில், ‘தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. காவிரி டெல்டாவிற்கு போதிய தண்ணீர் இன்றி விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகி வருகிறது.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், டெல்லிக்கு மத்திய அரசு அறிவித்த புதிய சட்டத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அதன்படி காங்கிரஸ் கட்சியும், டெல்லிக்கு புதிய சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அறிக்கை விட்ட பிறகு ‘இந்தியா’ கூட்டணியில் பங்கேற்றார்.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிடம் கேட்காமல், பெங்களூருவில் நடந்த ‘இந்தியா’ கூட்டணியில் பங்கேற்று விருந்து சாப்பிட்டு வருகிறார். இன்று பல பெண்கள் உரிமைத்தொகை கிடைக்காமல் அலைந்து வருகின்றனர்.
அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தேர்தலில் வெற்றி பெற்று இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த குடும்ப அட்டைகளில் பாதி பேருக்கு கூட இல்லாமல், ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மட்டும் வழங்குவதாக கூறுகிறார்கள். இது எதில் போய் முடியும் என்றால், அதிமுக ஆட்சியில் போய்தான் முடியும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கியதை இன்னும் மக்கள் பாராட்டுகின்றனர். எனவே, அதிமுக ஆட்சிக்காலம் வெகுவிரைவில் தமிழகத்தில் மலரும். அதற்காக அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க:"விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - உறவினர்கள் கோரிக்கை!