தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே முழையூர் சமத்துவபுரத்தில் உள்ள திருமண அரங்கில், மாமன்னன் இராசராஜசோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் 1037வது சதய விழாநடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியனுக்கு அவரது பணியை பாராட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் மோதிரம் அணிவித்தார். மேலும், சோழன் நாள்காட்டியும், விழா மலரும் வெளியிடப்பட்டது, ராஜராஜ சோழன் தொடர்பான கட்டுரை போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களை பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், பங்கேற்ற குடவாயில் பாலசுப்பிரமணியன், “ சோழ நாச்சியார் ராஜசேகர் ஆகியோர் உடையாரில் தான் மாமன்னன் நினைவிடம் உள்ளது என்பதற்கு அவர் இறந்து நூறு ஆண்டுகளுக்கு பின் வைக்கப்பட்ட கல்வெட்டு பால்குளத்தி அம்மன் கோயிலில் உள்ளது, அவர் பிறந்து வாழ்ந்து மறைந்தது இந்த மண் தான் எனவே இங்கு அவருக்கு அரசின் சார்பில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும் என்றும், சென்னை கடற்கரை சாலையில் கன்னியாகுமரி வரையிலான 700 கி.மீ நீள சாலைக்கு, மாமன்னன் இராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும்.
அதுமட்டுமின்றி, இந்திய தலைநகரான டில்லியில் முக்கியமான சாலைக்கு அவரது பெயர் வைப்பதுடன், அவரது திருவுருவ சிலை ஒன்றை அங்கு நிறுவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.