தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள நத்தம் கிராம சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இது குறித்து நத்தம் கிராம மக்கள் பல அரசு அலுவலர்களைச் சந்தித்து முறையிட்டும், பலமுறை போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. இந்நிலையில் நத்தம் கிராமத்தில் உள்ள வாய்க்காலைத் தூர் வாரும் பணி நடைபெற்றது அப்போது தூர் வாரிய மண்ணை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்தாமல், குறுகிய சாலையின் பக்கவாட்டிலேயே கொட்டி இருந்தனர்.
தற்போது இரு நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால், சாலையோரம் கொட்டப்பட்ட மண் சரிந்து சாலை முழுவதும் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது இதனால் அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர், விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் எனப் பொதுமக்கள் சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்தான சூழல் உள்ளது.
இதற்கிடையே இன்று (ஜூன் 19) பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ சாலை இருந்த சகதியில் சறுக்கி, வாய்க்காலில் கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. அதிஸ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நூற்றுக்கணக்கானோர் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.