பிரபல நகைக் கடையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் குறுகிய நாட்களில் 7க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வந்த பிரபலமான நகைக் கடைக்குச் சொந்தமான கிளை ஒன்று கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே, நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ளது.
இந்த கடை வழக்கத்திற்கு மாறாக நேற்று இரவு 7.30 மணிக்கு பூட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. எந்த விபரமும் தெரியாத நிலையில், கடையில் தனியார் நிறுவன பாதுகாவலர் மட்டும் பணியில் இருந்து உள்ளார். மூடப்பட்ட கடை ஷட்டரில் ‘இன்று ஒரு நாள் மட்டும் கடை விடுமுறை’ என அச்சடிக்கப்பட்ட துண்டு காகிதம் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் இன்று கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கும்பகோணம் கிளையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாதாந்திர தவணை திட்டத்தில் சேர்ந்திருக்கலாம் என தெரிய வருகிறது. இதனிடையில், கடைக்கு வந்த நகை பட்டறைக்காரர் கூறுகையில், பிரபலமான நகைக் கடையின் மதுரை கிளைக்கு 60 கிராம் அளவிற்கு நகை அளித்ததில் ரூபாய் 4 லட்சம் வரை கடை நிர்வாகம் தனக்கு பாக்கி தர இருக்கிறது என கூறினார்.
இது குறித்து மதுரைக் கிளையில் கேட்டதற்கு, இன்று கும்பகோணம் கிளைக்குச் சென்று பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என மதுரைக் கிளை மேலாளர் கூறியதால் கும்பகோணத்திற்கு வந்ததாகவும், தற்போது கடை மூடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். மேலும், கடந்த சில நாட்களாகவே திருச்சி, தஞ்சை கிளைகள் மூடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க:69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்படுகிறது!